Friday, September 28, 2012

''நடுகற்களில் உறைந்து உள்ளது தமிழர் வரலாறு!''


ண்டைய காலம்தொட்டே, போரில் இறந்தவர்களின் நினைவாக 'நடுகற்களை’ நடும் பழக்கம் தமிழர்களிடையே இருக்கிறது. அவற்றின் சாட்சியாகத்தான், இன்றைக்குப் பல கிராமங்களில் 'நடுகல்’ சிறு தெய்வங்களாக மாறி வரலாற்றைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் 'நடுகல்’ தெய்வங்களைப் பற்றி, தன்னுடைய எம்.ஃபில் பட்டத்துக்காக ஆய்வுகள் செய்து உள்ளார், திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை மாணவர் சுதாகர்.
''இலக்கியத்தில் தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் நடுகற்கள் வழிபாடுகளைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளன. நடுகற்களை ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர்கள், சங்ககாலம்தொட்டே, இந்தப் பழக்கம் இருப்பதாகச் சொல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், திருவண்ணாமலை வட்டாரங்களில் மிகப் பழமைவாய்ந்த நடுகற்கள் அதிக அளவில் உள்ளன. ஆநிரை கவர்தல், மீட்டல், பெண்களைக் கவர்தல், மீட்டல் ஆகிய காரணங்களுக்காக நடைபெற்ற போர்களில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு இந்த நடுகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக, திருவண்ணாமலைப் பகுதிகளில் காணப்படும் 'வேடியப்பன்’ நடுகற்கள் சிறு தெய்வமாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த வேடியப்பன், நடுகற்களில் வில் அம்புடன் இருக்கிறார். வேடியப்பனின் வேலை, கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டுவருவதும் மக்களைக் காப்பாற்றுவதும்தான். இந்த நடுகற்களில் எழுத்து வடிவங்கள் தென்படுவதால், வேடியப்பனின் காலம் சோழர் காலமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கொளத்தூர் என்ற கிராமத்தில் 'சிலைக்காரன் மற்றும் தாத்தா- பாட்டி’ நடுகற்கள் இருக்கின்றன. இவற்றில் சிலைக்காரனின் கையில் கேடயம் இருக்கிறது. இவனும் வேடியப்பனைப்போல வாழ்ந்து இருக்கலாம். வாய்வழிக் கதையாக நாம் அறிவது, இந்தச் சிலைக்காரன் என்பவன், அந்தக் கிராமத்தில் இருந்த வீரம் பொருந்திய மாவீரன்; கிராமத்துக்குச் சொந்தமான ஏரி உடைந்ததால், அந்தப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற பலி கொடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
வேட்டவலம் அய்யனார் கோயிலில் 'சதிகல்’ ஒன்று உள்ளது. வீரமரணம் அடைந்த கணவன் இறந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உடன்கட்டை ஏறிய மனைவிக்காக வைக்கப்பட்ட நடுகல் அது. இதனை மக்கள் 'பச்சை அம்மன்’ என்றுதான் வழிபடுகின்றனர். பொலக்குணம் என்ற கிராமத்தில் முனியப்பனுக்கு 'நடுகல்’ உள்ளது. தமிழ்நாட்டிலேயே முனியப்பனுக்கு உருவத்துடன் இருக்கும் நடுகல் இதுவாகத்தான் இருக்கும். நடுகற்களை முழுமையாக ஆராய்ந்தால் மறைந்துகிடக்கும் தமிழரின் தொன்மையான வரலாறுகளை மீட்டெடுக்க முடியும். மக்களின் கலாசாரத்தையும், சடங்குகளையும், வாழ்வியல் முறைகளையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்'' என்கிறார் உறுதியான குரலில் சுதாகர்!
- காசி.வேம்பையன்

No comments:

Post a Comment