Friday, September 28, 2012

குழந்தைகள் ஜாக்கிரதை!


ர்வதேச அளவில் போதிய சத்துணவு இன்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்கு உட்பட்ட 19,000 குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள். உலகிலேயே இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம். இது 2012-ம் ஆண்டுக்கான யுனிஃசெப் நிறுவனம் அளித்து உள்ள அதிர்ச்சி அறிக்கை.
2011-ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும் சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில், சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகளும், காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும், சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகளும் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் உணவு கிடைக்காமல் போதிய சத்து இல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் ஆறு குழந்தைகள் உயிர் இழக்கின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும் காரணமான ஊட்டச் சத்துக் குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?
சென்னையில் குழந்தைகள் நலன்குறித்து தொடர்ந்து இயங்கிவரும் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் ஆதங்கத்தோடு சில ஆலோசனைகளைச் சொன்னார். ''ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், குடும்பத்தில் பெண்களுக்கும் அவர்கள் கல்விக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை முக்கியமானதாகக் கூறலாம். இந்தப் பிரச்னையை ஒரே கோணத்தில் பார்க்காமல் பல்வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஐ.நா. சபையின் யுனிசெஃப் கொடுக்கும் அறிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. அரசின் அறிக்கையே இப்படி இருக்கிறது என்றால், வேறு ஒரு சுதந்திரமான அமைப்போ, அல்லது நிறுவனமோ ஆய்வு செய்தால் இன்னும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியேவரும். கல்வி உரிமைச் சட்டம் ஆறு வயது முதல் 14 வயதுவரை உள்ளவர்களைக் குழந்தைகள் எனச் சொல்கிறது. குழந்தைகள் கல்வி கற்கும் வயதை ஏன் ஆறில் இருந்து தொடங்கவேண்டும்? மூன்றரை வயதில் இருந்தே குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால், பிறந்ததில் இருந்து ஐந்து வயதுவரை குழந்தைகள் நலனில் அரசு கவனம் செலுத்துவது இல்லை. இலவச மருத்துவ வசதி இருந்தால் அதிகக் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறந்துபோகும் துர்பாக்கியம் நிகழாமல் இருக்கும். அங்கன்வாடி மையங்களில்தான் ஆறு வயதுவரை உள்ள குழந்தைகள் நாள் முழுக்க இருக்கிறார்கள். ஆனால், அந்த மையம் இயங்கும் விதம், சத்துணவின் தரம் குறித்துக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால் நிறைய ஓட்டைகள் ஏற்படுகின்றன. பொருளாதார மேதை அமர்த்தியாசென், மூன்றாம் உலக நாடுகள் தங்களை வளர்ச்சி அடைந்த நாடுகளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற அவசரத்தில் இழைக்கும் பெரிய தவறு, ராணுவ தளவாடங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதுதான். அதில் ஒரு சதவிகித நிதியைக் குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கினாலே ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கலாம். இனிமேலாவது குழந்தைகளுக்கு என்று பட்ஜெட் தாக்கலில், நிதி ஒதுக்க வேண்டும். சுகாதார வசதிசெய்து கொடுப்பவர்கள், குடிநீர் வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோருமே தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் குழந்தைகள் நலன் மீதான அக்கறையுடனும் பொறுப்பு உணர்வுடனும் நடந்துகொண்டாலே ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்'' என்றார்.
''இப்படி ஒரு செய்தி என்பது, வேறு எதைக்காட்டிலும் இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவுதான். ஆள்பவர்களும் ஆளுகைக்கு உட்பட்டவர்களும் தங்களின் ஆதாரமான கருத்தைச் செலுத்தவேண்டிய கட்டாய நிலை இது. தேசத்தின் எதிர்காலம் குறித்து மிகப் பதறவைக்கும் கருத்து. கற்பனைக்கும் சாத்தியமற்ற இது, ஒரு பெரிய ஆய்வின் உண்மை என்றால், வெட்கத்திலும் அவமானத்திலும் தலை தாழ்ந்து மனம் ஓய்கிறது. இதுதான் நம் மூலாதாரமோ? யாரைக்குறித்தும் அடிப்படையில் மிக முக்கியமாகக் கவனம் செலுத்தி நாம், நம் திட்டங்களையும் நடைமுறைகளயும் வரையறுத்துக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்று மற்றவர்களால் உணர்த்தப்படுவது எவ்வளவு பெரிய வலி? லட்சம் கோடி ஊழல்கள்... ஆயிரம் கோடி திட்டங்கள்... பற்பல நிதிகள்... ஒதுக்கீடுகள்... வாக்குறுதிகள்... சூளுரைகள்... பேரதிகாரப் பீடங்கள்... படோபங்கள்... அளவற்ற விரயங்களுக்கு மத்தியில் பரிதாபமான நிராதரவுப் பார்வையுடன் பலவீனக் குழந்தைகள்... இதுதான் இன்றைய சாபம். உடல் ஊட்டம் இன்றி அறிவூட்டம் இல்லை. அறிவூட்டம் இன்றி நல்ல தலைமுறை கிடைக்கும் சாத்தியம் இல்லை. எப்போதும் குழந்தைகள் இங்கே இரண்டாம், மூன்றாம் பட்சமானவர்களாகவே கருதப்படுகிறார்கள். உணவு என்றாலும், உயரிய கலை, இலக்கியம் என்றாலும் மிஞ்சியதைப் போட்டால்போதும் என்ற பைசாச மனநிலையே காரணம்'' எனக் கொந்தளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் யூமாவாசுகி.
'' இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். வறுமையில் உள்ளவர்கள் மேலும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவதுதான் 59 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல், உடல்வளர்ச்சிக் குன்றிப்போய் நோஞ்சான் குழந்தைகளாக இருப்பதற்கான முக்கியக் காரணம். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் பசியில் வாடும் மக்களுக்குக் கிடைக்காமல் மக்கிப்போகியும் எலிகளுக்குத் தீனியாகவும் வீணாகின்றன. இப்படி வீணாகும் தானியங்களை வறுமையில்வாடும் மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி கேட்டபோது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபப்பட்டார். மக்கி வீணாகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்குத் தரப்படாமல், அவர்கள் பசியால் செத்துக்கொண்டு இருப்பதை வேடிக்கைபார்ப்பது எவ்வளவு பெரியக் கொடூரம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாகக் கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அந்த வயதில் இருக்கவேண்டிய உடல் வளர்ச்சி இல்லாமல், நோஞ்சான் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு அந்த ஐந்து வயதுக்குள் கிடைக்கவேண்டிய மூளை வளர்ச்சி என்பது கிடைக்காமல் போய்விடும். நாளடைவில் மந்தமாகப் போய்விடுவார்கள். இதனால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். நாட்டைப்பற்றிய சிந்தனையோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ வளராமல் போகும். எது நடந்தாலும் கேள்விகேட்காமல், ஆடு மாடுகளைப்போல் வளர்ந்துவிடுவார்கள். அடிமைகளைப்போல் குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். இப்படியே போனால், எதிர்காலத்தில் இந்தியா ஒரு பலவீனமான நாடாகிவிடும்'' என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இராக் நாட்டை சீரழித்த அமெரிக்கா, 20 ஆண்டுகளுக்கு முன்பே இராக் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்ததால், உயிர் காக்கும் மருந்துகள்கூட அந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல்போனது. அதனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் மருந்துகள் கிடைக்காமல், கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்கள். 20 ஆண்டுகள் கழித்து இளைஞர்களே இல்லாத நாடாக இராக் மாறிவிட்டது. இந்த நிலைமைதான் இப்போது இந்தியாவுக்கும். இப்படியே நீடித்தால் இந்தியாவைக் காப்பாற்ற இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மற்ற நாடுகளிடம் சிக்கிப் பெரும் சேதத்தையும் மீண்டுவர முடியாத மோசமான வீழ்ச்சியையும் சந்திக்கவேண்டி இருக்கும். தமிழ் மக்களே... நாமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

No comments:

Post a Comment