Monday, December 31, 2012

2012 - டாப் 10 நம்பிக்கைகள்


அதிரடி ஐ.ஏ.எஸ்!
பாலாஜி, அடிப்படையில் ஐ.ஐ.டி. பொறியாளர். விருதுநகர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின், 30 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்குத் தபால் மூலம் வீடுகளுக்கே சாதிச் சான்றிதழ்கள் அனுப்பிவைத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு பேப்பர் கப் தயாரிக்கும் மையம் அமைத்துத் தந்தது, பஞ்சாயத்து நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட சுமார் 40 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு 'செக்’ பவரைப் பறித்தது என இவரைத் திரும்பிப் பார்த்தது தமிழகம். ஆளும் கட்சி, அதிகார வர்க்கத்தினரின் சிபாரிசுகளைக் குப்பையில் போட்டுவிட்டு, சத்துணவுத் திட்டத்தில் 1,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்தது, பாலாஜியின் சூப்பர் ஷாட். நேர்மைக்குப் பரிசு வேண்டுமே?! விருதுநகரில் இருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர், சமீபத்தில்தான் மாநிலத் திட்டக் கமிஷனின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்!
எதிர்நீச்சல் சாம்பியன்!
னுஷாவுக்கு பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. 'உயிருக்கே உத்தரவாதம் இல்லை!’ என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 160 தங்கப் பதக்கங்கள் வென்ற நீச்சல் சாம்பியன். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி. 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ போட்டியில் நேஷனல் சாம்பியன். இடைவிடாத முயற்சியும் பயிற்சியுமாக இந்த ஆண்டு மட்டும் ஆறு தங்கப் பதக்கங்களைக் குவித்திருக்கும் அனுஷாவின் ஒரே இலக்கு, ஒலிம்பிக் தங்கம். ஆல் தி பெஸ்ட் கண்ணம்மா!
டேக் இட் ஈஸி தோஸ்த்!
பாலாஜி... விசில் பிகில் கிளப்பும் ஆர்.ஜே! பிக் எஃப்.எம்மில் இவரின் 'டேக் இட் ஈஸி’, 'கிராஸ் டாக்’ நிகழ்ச்சிகள் செம அலப்பறை அட்ராசிட்டி. அதிலும், சினிமாக்களைக் கலாய்க்கும் 'கிராஸ்டாக்’ நிகழ்ச்சியை 197 நாடுகளில் உள்ள ஒரு கோடித் தமிழர்கள் இணையதளம் மூலம் கேட்டிருப்பது... கிராஸ் பார்டர் ரெக்கார்டு. பாலாஜியின் நிகழ்ச்சிப் பதிவுகளைக் கேட்பதற்காகவே, கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரத்யேக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உண்டு. பாலாஜி 'ஆன் ஏர்’ என்றால், ஏர் டிராஃபிக் அள்ளுது என்று அர்த்தம்!
வணக்கத்துக்குரிய இயக்கம்!
'சுயவாழ்வின் சுகங்களில் திளைப்பவர்கள் ஐ.டி. இளைஞர்கள்’ என்ற விமர்சனங்களை அடித்து நொறுக்கி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட வந்த இளைய தலைமுறை அமைப்பு, 'சேவ் தமிழ்ஸ்’. ஈழத்தின் சோகம் பொறுக்காமல் போராடக் கிளம்பிய இந்த இளைஞர்கள், இன்று தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த சக்தி. முல்லைப் பெரியாறு பிரச்னை முதல் பரமக்குடி துப்பாக்கிச் சூடு வரை அனைத்துப் பிரச்னை களிலும் களம் இறங்கிய இவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைப்பாளர் செந்திலின் முயற்சியில், ஆர்ப்பாட்டம், ஆய்வரங்கம், போராட்டம் என்று வீதிக்கு வந்து போராடுவது நாளைகளின் மீது நம்பிக்கையை விதைக்கிறது!
சார்தான் ஹீரோ!
றுப்பு நிறம், களையான முகம் என விஜய் சேதுபதிக்கு அப்படியே 'நம்மாளு’ லுக். கோடம்பாக் கத்தில் இவர் லேண்ட் ஆனது 2003-ல். நடிப்பு ஆர்வத்தில் கூத்துப் பட்டறையில் அக்கவுன்டன்ட் ஆனது முதல்படி. 'புதுப்பேட்டை’ முதல் 'நான் மகான் அல்ல’ வரை பல படங்களில் 'தலை’காட்டியவர், கவனம் ஈர்த்த குறும்படங்களில் பின்னியெடுத்தார். 'தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக நடித்த பிறகும், 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என அடம் பிடிக்காமல் 'சுந்தர பாண்டியன்’ வில்லனாக வந்து அட்டென்ஷன் வாங்கினார். அடுத்தடுத்து 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என இரண்டு படங்களில் பிரமாதப்படுத்த, 'யார்யா இவன்..?’ என நம்பிக்கை விசில் குவிய, இப்போது விஜய் சேதுபதிக்காகக் காத்திருக்கின்றன பல நல்ல கதைகள்!
திருமதி நம்பிக்கை!
ரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த சாந்தி, இன்று மரியாதைக்குரிய மக்கள் நாயகி. கரூர் கோட்டாட்சியராக முதலில் பணியேற்றதுமே, தனது அலைபேசி எண்ணைப் பத்திரிகைகளில் கொடுத்து, மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதில் தெரிந்தது இவரது மக்கள் காதல். கரூரில் கொடிகட்டிப் பறந்த மணல் மாஃபியாக்களை இவர் ஒடுக்கியது அனைத்தும் அதிரடி அத்தியாயங்கள். 'பெண் அதிகாரி’ என்ற சலுகை கேட்காமல், துணிச்சலாக இரவு நேரங்களிலும் ரோந்து சென்று, மணல் திருடர்களை அலறவிட்ட தைரிய லட்சுமி. எதிர்ப்பார் எவரும் இன்றி அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கில் மோட்டார் போட்டு, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருடியதைக் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் களம் இறங்கித் தட்டிக்கேட்டதில் அரண்டுமிரண்டது லோக்கல் மாஃபியா. தற்போது உசிலம்பட்டி ஆர்.டி.ஓ-வாக, உசிலம்பட்டிச் சந்தையில் பல்லாண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பரபரக்கும் சாந்திக்கு அழுத்தமாக ஒரு சல்யூட்!
கிரிக்கெட் மின்னல்!
லகக் கோப்பை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில், அசரடித்த தமிழ்ப் பையன் பாபா அபராஜித். பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், அபராஜித் அடித்த அரை சதம்... ஆஹா. அதுதான் இந்தியாவை அரை இறுதிப் போட்டிக்குள் நுழையவைத்தது. இந்த ஆண்டு கர்நாடகாவுக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி டிராஃபி போட்டியில் சதம் அடித்து ஃபார்ம் நிரூபித்ததில், இந்திய அணியில் நுழையக் காத்திருக்கிறார்!
நம்பிக்கை இயக்குநர்கள்!
யூகிக்க முடியாத, புதிய கதை சொல்லும் யுத்தியோடு வெளியான 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’... இரு படங்களும் செம ஸ்வீட். 'பீட்சா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடிப்படையில் மென்பொருள் பொறியாளர். குறும்படங்களில் வித்தை பழகி 'பீட்சா’ பரிமாறியிருக்கிறார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி, எடிட்டிங் கோர்ஸ் படித்தவர். கானுயிர் ஒளிப் பதிவாளர் அல்போன்ஸ்ராயின் ஆவணப்படங்களுக்கு படத் தொகுப்பு  செய்தவர். 'உண்மைக் கதை’ என்றாலே சோகத்தைப் பிழியவிடும் டிரெண்ட் உடைத்து, 'என்.கே.பி.கே.’ படத்தில் கதறக் கதறச் சிரிக்கவைத்த இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு... வார்ம் வெல்கம் பாடியது கோடம்பாக்கம். இவர்கள் இருவரிடமும் 'இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்’!
தடகளத் தடம்!
பிரேம்குமார்... மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவருக்கு உழைப்பும் தாகமும் மட்டுமே முதலீடு. அம்மா கிராமத்தில் சர்ச் பெல் அடிக்க, இவர் சர்வதேசக் களங்களில் மெடல் அடிக்கிறார். நீளம் தாண்டுதலில் ஜூனியர் லெவலில் தேசிய சாதனை, கொழும்பில் இளையோருக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி என முத்திரை பதித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளப் பிரிவில் இந்தியாவில் இருந்து 27 பேர் சென்றதில் ஒரே ஒரு பதக்கம்தான் கிடைத்தது. அது பிரேம்குமார் அடித்தது!
செல்லம்!
த்திக் கண்களும் பொசுபொசு முயல் முகமுமாக லட்சுமி மேனன், தமிழர் ஸ்பெஷல் நாயகி. 'சுந்தரபாண்டியன்’, 'கும்கி’ என நடித்த இரண்டு படங்களும் எகிடுதகிடு ஹிட். அழகில் மட்டும் ஈர்க்காமல், நடிப்பிலும் நம்பிக்கை விதைப்பதால் எட்டுவார் இன்னும் உயரங்கள். அட்வான்ஸ் கொடுக்கப் பலர் க்யூவில் காத்திருக்க, பத்தாம் கிளாஸ் பரீட்சைக்குப் படிக்குது பொண்ணு. ஆத்தா, நீ பாஸாயிட்ட!

No comments:

Post a Comment