Tuesday, January 3, 2012

2011 டாப் 10 மனிதர்கள்!

2011 டாப் 10 மனிதர்கள்!

விகடன் டீம்

நெருப்புத் தமிழன்!

லகம் முழுக்க அணு மின் நிலையங்களுக்கு எதிராக எழும் முழக்கங்களில் சுப.உதயகுமாரனின் குரல் மிக முக்கியமானது. இன்றைய கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்ட நெருப்புக்கு 80-களிலேயே கனல் எடுத்தவர் இவர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவக் கிராமத்து மக்கள் இவரது தலைமை யில் உறுதியாகத் திரண்டபோது இந்திய அரசே நடுங்கியது. அமைதிக் கல்வியில் முனைவரான இவர், எத்தியோப்பியாவில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணி யாற்றியவர். தெருமுனைப் பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிவியல் மேடைகள், பட்டினிப் போராட்டங்கள் என ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

அணு உலைகள், அணுக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்த களப் பணிகளுக்காக ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற நாடு களுக்குச் சென்று வந்தவர். கூடங்குளம் அணு உலைகள்பற்றி இவர் உருவாக்கிய 'தி கூடங்குளம் ஹேண்ட்புக்’ இன்று முக்கியமானதொரு ஆவணம். 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம், ஜைதாபூர், ரவத் பாட்டா, தாராபூர் என அணு உலைகள் அமைந்து இருக்கும் இந்தியாவின் அனைத்துத் தளங்களிலும் போராட்ட நெருப்பைப் பற்றியெரியச் செய்கிறார் உதயகுமாரன்!


தமிழகத்தின் 'ஓயாத அலைகள்’!

தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்றவைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் மீதான தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றங்களில் 'கறும்’புலியாக உலவினார். விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதித்ததும்தான் கேரள அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஓர் இடம்கூட இல்லை. ஆனாலும், அந்தக் கவலை இல்லாமல், தமிழக நலனுக்காக முழக்க மிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது. பதவிகளுக்கும் பேரங்களுக்கும் சமரசங்களுக்கும் இரையாகிக்கிடக்கும் தமிழக அரசியலில், வைகோ... ஒரு போராட்டப் புயல்!


இரும்பு மனிதர்!

துணிச்சலும் தூய்மையுமாக வந்து, தமிழக மக்களின் கனவு அதிகாரிக்கு உருவம் கொடுத்தார் பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ். ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றும் தேர்தல் அவலங்களுக்கு இவர் அடித்த சாவு மணியில், பல அரசியல்வாதிகளின் அஸ்திவாரமே கிடுகிடுத்தது. 'ஓட்டுக்குப் பணம்’ என்ற வியாபார அரசியலுக்கு இவர் தடாலடித் தடைகள் போட, ''வெச்சார்ல ஆப்பு... வெச்சார்ல ஆப்பு!'' என ஷங்கர் பட க்ளைமாக்ஸ் போலக் குதூகலித்தது தமிழகம். ''தமிழகத்தில் எமர்ஜென்சி அமலில் இருக்கிறதோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது!'' என்று அப்போதைய முதல்வரையே புலம்பவைத்தது இவரது அதிரடி வியூகங்கள். ''நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும். உங்கள் ஓட்டு, உங்கள் சக்தி. அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்!'' என்ற இவரது அறைகூவலுக்கு தமிழகமே வாக்குச் சாவடிகளுக்குத் திரண்டதன் விளைவு, வரலாறு காணாத 77.4 சதவிகித வாக்குப் பதிவு சாத்தியமானது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு செல்போன் எண் அறிவித்தது, வெளி மாநிலங்களில் இருந்து நான்கு ஐ.ஜி-க்களைத் தேர்தல் பணிக்கென இறக்கியது, சென்சிட்டிவ் மதுரையை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, விதிமீறல்கள் - வன்முறைகளை அடக்கியது எனத் தீயாக வேலை செய்த பிரவீன்குமார், ஒரு மக்கள் அதிகாரிக்கான கம்பீர உதாரணம்!


தமிழ் சினிமாவின் தாதா!

மிழ்த் திரைச் சரித்திரத்தில், கே.பி-யின் சாதனைகள் ஓர் இனிய அத்தியாயம். மனித உறவுகளின் மகத்தான பக்கங்களை திடுக்கிடும்படியாகத் திறந்துகாட்டியவர். கோடம்பாக்கத்தின் குருஜிக்கு, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் கனிந்தது.

குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் பெண் மனதின் பேருண்மைகளையும் இவர் அளவுக்குப் பேசியவர்கள் இங்கே இல்லை. ரஜினி, கமல் என்ற இரண்டு பிரமாண்டங்களைச் செதுக்கிய சிகரம். வேகமும் தாகமும் குறையாமல் 100 படங்கள் இயக்கி சதம் அடித்த சாதனைப் படைப்பாளி. மேஜர் சந்திரகாந்த், அவள் ஒரு தொடர்கதை 'கவிதா’, சர்வர் சுந்தரம், சிந்து பைரவி 'ஜெ.கே.பி.’ என இவர் உருவாக்கிய பாத்திரங்களும் சமூகத்தின் மீது சாட்டை சொடுக்கிய வசனங்களும் காலத்தின் திரையில் என்றென்றும் அழியாது. இப்போதும் சினிமா, நாடகம், சீரியல் எனத் தாகம் குறையாமல் இயங்கும் கே.பி, தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை படிக்க வேண்டிய புத்துணர்வு நூலகம்!


தளராத போராளி!

ழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது, சண்முகத்தின் உயிர்க் குரல். 1992-ம் ஆண்டு வாச்சாத்தி மலைக் கிராமத்தில், காவல் துறையும் வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் சண்முகம் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்திய மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, குற்றம்சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது நீதிமன்றம். இந்திய நீதித் துறை சரித்திரத்தில் இது ஒரு மைல் கல். அந்த எளிய மக்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்கப் போராடிய சண்முகம், தீண்டா மைக்கும் அதிகார வன்முறைக்கும் எதிராகத் தீப்பந்தம் ஏந்துவதையே தன் வாழ்க்கையாக்கிக் கொண்டவர்!


துணிவின் மும்மூர்த்திகள்!

மிக சென்சிட்டிவ்வான மதுரை மாவட்டத்துக்கு நேர்மையான ஆட்சியர், தீர்க்கமான ஆணையர், கெடுபிடியான கண்காணிப்பாளர் அமைந்ததற்குக் காரணமும் அதே சென்சிட்டிவ் 'அ’ ஃபேக்டர்தான்! வன்முறை, ஊழல், கட்டப்பஞ்சாயத்து எனத் தெலுங்குப் பட வில்லனின் கோட்டை போல மதுரையை வைத்திருந்த மைனர்களின் மென்னியை முறுக்கித் துரத்தியதில் உயர்ந்தது இவர்களின் கம்பீரம். 'ஆளும் கட்சியின் கரை வேட்டி கட்டிக்கொண்டால் எதுவும் பண்ணலாம்’ எனத் திரிந்த திருட்டுப் பூனைகளுக்கு இவர்கள் அதிரடி மணி கட்டினர். அரசியல் அதிகாரத்தைக் காட்டி நடந்த அத்தனை அநியாயங்களுக்கும் இவர்கள் பதிலடி தந்தபோதுதான் மதுரை மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வந்தது. 'கலெக்டர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்!’ என்று தாசில்தாரை வைத்தே புகார் கொடுத்தது, 'கலெக்டர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்’ என்று வலை விரித்தது என அனைத்துச் சதிகளும் கரைந்து மறைந்தன. நில அபகரிப்பு உள்ளிட்ட அதர்மங்களுக்கு எதிராகத் தொடர்ந்து களை எடுக்கிறார்கள். இவர்களைப் போன்ற அதிகாரிகள்தான் இன்றைக்கு இந்த தேசத்தின் முழு முதல் தேவை!


ஆட்ட நாயகர்கள்!

'ஆடுகளம்’ படம் ஆறு தேசிய விருதுகளை அள்ளி வந்தது, தமிழ்த் திரையின் சரித்திரப் பக்கங்களில் பதிந்தது! சேவல் சண்டையைக் களமாக்கி வெற்றிமாறன் ஆடிய 'ஆடுகளம்’, யதார்த்த சினிமா பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது. திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் படம் முழுக்க மிளிர்ந்தது ரசனையும் நேர்மையுமான உழைப்பு! இயக்கத்துக்கும் திரைக்கதைக்குமாக வெற்றிமாறன் இரண்டு விருதுகள் வென்றதைக் கொண்டாடி மகிழ்ந்தது கோடம்பாக்கம். உடல்மொழி, குரல்மொழி என உழைத்த தனுஷ் 'சிறந்த நடிகருக்கான’ தேசிய விருது தட்டி அடுத்த உயரம் தொட்டார். அதோடு 'கொல வெறி’யோடு யூத் பல்ஸ் பிடித்து உற்சாக உருமி அடித்ததிலும் சென்சேஷன் ஆனார் தனுஷ்!


சமச்சீர் இளவரசன்!

ருணாநிதி ஆட்சியில் அமலாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, சமச்சீர்க் கல்விக்கு ஜெயலலிதா தடை போட்டபோது, கல்வியாளர்களுடன் பிரின்ஸ் கஜேந்திர பாபு சுழற்றிய போராட்டச் சாட்டை அரசை மிரளவைத்தது. 'பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கான விழிப்பு உணர்வு போராட்டங்களை முன் னெடுத்துவருபவர். பொதுக் கூட்ட மேடைகள், அரங்கக் கூட்டங்கள், ஊடகங்கள் மூலமாக சமச்சீர்க் கல்விக்காகத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிரசாரம் ஒரு தலைமுறைக்கு இவர் தந்த கொடை!


ஆல்ரவுண்ட் தமிழன்!

28 வருடங்களுக்குப் பிறகு, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு தமிழன் இடம் பிடித்தது நமக்கான பெருமை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரிலேயே 'தொடர் நாயகன்’ பட்டம் தட்டிய ரவிச்சந் திரன் அஸ்வினைத் தேசம் திரும்பிப் பார்த்தது. உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஆகக்கூடிய எதிர்காலத்தை, அஸ்வினின் அடுத்தடுத்த சாதனைகள் பறைசாற்றின. முதல் டெஸ்ட்டிலேயே 'மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வாங்கிய மூன்றாவது இந்தியர். ஒரே டெஸ்ட்டில் ஐந்து விக்கெட்டுகளும் சதமும் கண்ட மூன்றாவது இந்தியர். ஐ.பி.எல். பந்து வீச்சாளர்களிலேயே சிக்கனமான ஆவரேஜ் வைத்திருக்கும் பௌலர் என ரெகார்ட் பிரேக்குகளால் நிரம்பி இருக்கிறது இந்த சென்னைப் பையனின் டைரி!


தமிழ் சினிமாவின் பாசக்காரி!

பாசம் வழியும் கண்களும் பட்டாசுப் பேச்சும் யதார்த்த நடிப்புமாக சரண்யாவை எல்லோருக்கும் பிடிக்கும். படத்துக்குப் படம் மிளிரும் நடிப்பில், தமிழின் முக்கியமான நடிகைகள் பட்டியலில் பச்சக்என்று இடம் பிடித்த சரண்யாவுக்கு, 'தென்மேற்குப் பருவக்காற்று’ வீசியது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது. 'நாயகன்’ மூலம் சினிமாவுக்கு வந்த சரண்யா, கதாநாயகியாக டான்ஸ் கட்டிவிட்டு, அம்மா, அக்காவாக ஒப்புக்கு அழுதுவிட்டுப் போகும் நடிகைகளுக்கான சாபத்தை உடைத்தது பெரும் சாதனை. 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக ஓர் ஏழைத் தாயாக உழைப்பைக் கொட்டி வாழ்ந்து காட்டியிருந்த சரண்யாவுக்கு இன்னும் நிறைய தீனி போட வேண்டும் தமிழ் சினிமா!

No comments:

Post a Comment