காலி சோடா ஆன பாடிசோடா!
''தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வே இருக்காது'' என பஞ்ச் அடித்த அழகிரிக்கு டின்ச் அடித்தது 2011. தேர்தலுக்குப் பிறகு, 'அ(ழகிரி).தி.மு.க’-தான் இல்லாமல் போனது. இடைத் தேர்தல் ஃபார்முலாவைப் பொதுத் தேர்தலிலும் போட்டு வாங்க நினைத்தவரின் பிரியாணி, தேர்தல் ஆணையத்திடம் வேகவில்லை. மதுரை மாவட்ட கலெக்டராக வந்த சகாயம், தன் பங்குக்கு கசப்புக் கஷாயம் காய்ச்சினார். 'மேலூர் பக்கத்தில் உள்ள கோயிலுக்குப் போனபோது வீடியோ எடுக்க வந்த தாசில்தாருக்கு பூஜை போட்டார்’ என கும்மாங்கு குற்றச்சாட்டுக் கிளம்பியது. தாசில்தார் ஜகா வாங்கியதால், அண்ணனுக்கு ஆபத்து இல்லை. ஆனாலும், ஜெ-வின் 'மதுரை க்ளீன்’ ஆபரேஷன் ஆரம்பிக்க, 'போலீஸ் மேலமாசி வீதியைத் தாண்டிருச்சு ஓவர்... ஆரப்பாளையம் அரைவ்டு ஓவர்...’ என எப்போதும் வதந்திகள் திகிலடித்து, களிகிலி ஆனார் அழகிரி. அண்ணனைச் சுற்றி நின்று, 'தூக்கிரவா... தூக்கிரவா...’ என ஆர்ம்ஸ் முறுக்கிய பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி வகையறாக்கள் ஜெயிலுக்குள் போனது பெப்பெப்பே காமெடி. கொஞ்ச நாளைக்கு ஃபேஸ்புக்கில் பார்ட்டி போஸ் கொடுக்காமல் ஜூனியர் அஞ்சா நெஞ்ச னும் பம்மியது ஜுஜுபி காமெடி!
கொல வெறி ஸ்டார்!
பேரைக் கேட்டாலே சும்மா உதறுதில்ல? பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன்தான் 2011-ன் கொல வெறி ஸ்டார்!
ஒரு டாக்டர் ஆக்டரானது கதை அல்ல... கறுப்புச் சரித்திரம்! சுவத்துக்கு சுவர் 'லத்திகா’ படத்தின் 200-வது நாள் போஸ்டரைப் பார்த்து கார்ப்பரேஷன் மாடுகளே கலவரமாக, ரித்தீஷ் இடத்தை அன்னபோஸ்டில் கவ்வினார் ஆஞ்சநேய டாக்டர். ''படம் ஓடல... ஓட்டுறேன். 'லத்திகா’ பார்த்துட்டு என் பொண்ணு லத்திகாவே என்கிட்ட பேச மாட்றா...'' என வெட்கமே இல்லாத வெள்ளாவி சீனி ஸ்டேட்மென்ட்டுகளால், மீடியாக்களுக்கு செம காமெடி போணி. தொடர்ந்து வடபழனி சந்துக் கடைகளில் விதவிதமாக விக்குகள் வாங்கி மாட்டிக்கொண்டு, 'அடங்க மறு... அத்துமீறு’ என இந்த தொப்பை ஸ்டார் போட்ட ஆட்டம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குக்கே சவாலாக அமைந்தது. வருடம் முழுக்கப் பல்லு விளக்காமல் பப்ளிசிட்டிக்காக அலைந்தவர், ''நல்லா வருவ தம்பி'' என செல்வராகவனுக்கு வாழ்த்து சொல்லி... ரஜினிக்கும் ட்விட்டர் போட... அலறியது கோலிவுட்!
சரியாத்தான் பேசறோமாய்யா?
தேர்தல் சமயம் அம்மா கிண்டிய கூட்டணி அல்வாதான் இந்த வருடத்தின் குபீர் கிபீர்!
விஜயகாந்த், கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எனக் கூட்டணிக் கட்சி களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் சேர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக... உடனே, கால் டாக்ஸி பிடித்த கம்யூனிஸ்டுகள் விஜயகாந்த் ஆபீஸுக்குப் போய் உண்டியல் குலுக்க, செம ஜாலியானது ஏரியா. ''ஏய்ய்ய்... ஏய்ய்ய்...'' என விஜயகாந்த் வந்து வந்து போக, நியூஸ் ரிப்போர்ட்டர்களுக்கு டெங்கு ஃபீவர் வந்தது. இறுதியில் வைகோவுக்கு மட்டும் விழுந்தது ஆப்பு! ''35 சீட்டு வேணும்...'' என அவர் கேட்க, ''பிளாஸ்டிக்லயா... பெரம்புலயா...'' எனக் காமெடி பண்ணியது பன்னீர் கேங்க். தேர்தலைப் புறக்கணிப்பதாக வைகோ அறிவிக்க, 'உங்கள் அன்புச் சகோதரிக்கு உங்கள் மீது எப்போதும் மரியாதை இருக்கும்!’ என வைகோவுக்கு ஜெ. லெட்டர் போட, நாகர் கோவில் பஸ் ஸ்டாண்டில் பழக் கடை போடலாமா என நாஞ்சில் சம்பத் தலைமையில் ரகசிய ஆலோசனைகள் றெக்கை கட்டின!
காமெடி ஷேர் மார்க்கெட்!
தி.மு.க -காங்கிரஸின் தேர்தல் பேச்சுவார்த்தைதான் காமெடி கும்பமேளா!
காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் இல்லாததால், ஓப்பனிங் ஸாங்கிலேயே செட்டை உடைத்தார் ஈ.வி.கே.எஸ். அடுத்தடுத்து இரண்டு தரப்புக்கும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்ததில் டீ, போண்டா செலவு தேர்தல் பட்ஜெட்டில் எகிறியது. டெல்லியில் இருந்து குலாம்நபி ஆசாத் வந்து 250(!) தொகுதிகள் கேட்க, 'தங்களது மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வது’ என்று தீர்மானம் போட்டது தி.மு.க. கி.வீரமணி, திருமாவளவன் எல்லாம் சால்வை டான்ஸ் போட, ராஜினாமா பண்ணப்போனவர்கள், குதுப்மினாரைச் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார் கள். தயாநிதியும் அழகிரியும் சோனியாவோடு மீட்டிங் போட்டு 63 சீட்டுகள் என முடிவாக, ஏழரை ஸ்டார்ட். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு '63 நாயன்மார்கள்’ என்று கருணாநிதி உவமை சொல்ல, தேர்தல் முடிவில் நாயன்மார்கள் செம சுளுக்கு வாங்கினார்கள்!
'அப்பா’டக்கர்!
விஜய் நடித்த 'காவலன்’ படம் வெளியாவதில் முட்டுக்கட்டைகள் முளைக்க, தலைக்கு மருதாணி போட்டுக்கொண்டு போயஸ் தோட்டத்துக்கு ஓடினார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகரன். தேர்தலில் விஜய்யின் 'மக்கள் மன்றம்’ அ.தி.மு.க-வை ஆதரிப்பதாக அறிவித்து, மகனுக்கு அரசியல் டிரெய்லர் கட் பண்ணினார். 'விஜய் பேட்டி’ என்று வரச் சொல்லி ஏமாற்றி, பல நிருபர்களின் கண்களைக் குத்தினார். தேர்தலுக்குப் பிறகும் விடாமல், 'அ.தி.மு.க. ஆட்சி அமைய விஜய் அணிலாக உதவியதாக’ச் சொல்ல, ஆங்காங்கே தீக்குளிப்பு முயற்சிகள் நடந்தன. 'சட்டப்படி குற்றம்’ என சினிமா கோட்டாவிலும் விடாமல் சேகுவேரா கெட்டப்பில் சத்யராஜை வைத்து எஸ்.ஏ.சி. செய்த சித்ரவதை... சட்டப்படி இல்லை என்றாலும், குற்றம் குற்றமே! தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நின்று, ரத்த பூமியில் சார் ஜெயித்தது, காமெடிகளுக்கு நடுவே ஒரு ஆக்ஷன் பிளாக்!
கைமா காவியம்!
கலைஞர் கதை வசனம், பா.விஜய் ஹீரோ என்ற செட்டப்பைக் கேட்டதுமே, உலகத் தமிழர்கள் 'பங்கர்’ தேட ஆரம்பித்தார்கள். 'மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலைத் தழுவியது, 'டைட்டானிக்’ ரேஞ்சுக்குப் பிரமாண்டம், எனக்கு அம்மாவா குஷ்பு நடிக்கிறாங்க’ எனப் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் பரோட்டா பார்சல் சொன்னார் 'இளைஞன்’ ஹீரோ பா.விஜய். தி.மு.க. அமைச்சர்கள் ஸ்பான்சர் கடுப்பில் திரிய, படத்தில் உடன்பிறப்புக்களுக்கு ஒரே ஆறுதல் நமீதாதான். 2011-ல் நமீயின் கடைசிப் படம் என்கிற ஒன்றுதான் இளைஞனுக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்தது! எக்ஸ்ட்ரா பிராண்டலாக நாக்பூர் யுனிவர்சிட்டி ஒன்று 'இளைஞன்’ படத்துக்கு விருது கொடுக்க, 'ஒய் திஸ் கொல வெறி’ என அலறியது தமிழகம்!
சிக்ஸ் பேக்... கமிங் சூன்!
காங்கிரஸ் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு வந்த ஐந்து பேரிடம், ''என்ன... மொத்தக் கட்சியும் இங்கே வந்துட்டீங்க'' என துரைமுருகன் காமெடி பண்ண, மேட்டர் சீரியஸானது. காங்கிரஸ் கவரிமான்கள் எகிற, லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு ஐநாக்ஸுக்கு நைட் ஷோ கிளம்பினார் துரை. தேர்தலில் நேரு, பொன்முடி, வீரபாண்டி என முக்கியத் தலைகள் மண்ணடிக்க, காட்பாடியில் இவர் எஸ்கேப். ''சரியான சீட் ஒதுக்காததால் சட்டசபைக்குப் போக மாட்டோம்'' என தி.மு.க. அறிவித்தது. ஒரே ஒரு நாள் உள்ளே போன துரைமுருகன் அங்கேயும் 'கலக்கப்போவது யாரு?’ நடத்த, ''என்னைக் கிண்டல் பண்றாங்கோ'' என உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கதறியது செம காமெடி. ரெய்டு படலத்தில் துரைமுருகன் வீட்டுக்கும் போலீஸ் வர, ''காபி சாப்பிடுறீங்களா?'' என கூலிங் டீலிங் பேசியவர், இப்போது சிக்ஸ்பேக் முயற்சியில் ஜிம்மிலேயே கிடக்கிறார்!
டோட்டல் டேமேஜ்!
இந்த ஆண்டு ரொம்பவே காமெடி ஆகிப்போனார் மருத்துவர் ராமதாஸ்!
தேர்தல் நேரத்தில், கூட்டணிக்கும் சீட்டு பேரத்துக்கும் அய்யா அடித்த பல்டிகளுக்கு பயங்கர அப்ளாஸ். பேரன் கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கிற சாக்கில் கலைஞரிடம் 31 சீட்டுகள் கவ்வி வந்து, ''நாங்கள்லாம் அப்பவே அந்த மாதிரி... இப்ப சொல்லவா வேணும்'' என ரவுசு ஸ்பீக்கர் கட்டினார். ''இந்தத் திருமணம் தேர்தல் திருமணம்'' எனப் பன்னீர் தெளித்த கலைஞர், 31-ல் ஒன்றைப் பிடுங்கி காங்கிரஸுக்குத் தந்து வெந்நீர் அடித்தார். தேர்தல் முடிவுகளோ மூணே மூணு சீட்டுகளோடு முகத்தில் அடித்தது. தைலாபுரத்தில் தைலம் தடவிக்கொண்டே ''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறோம்'' என உடனடியாக உள் டவுசரைத் திருப்பிப் போட, மக்கள் டி.வி. இமாம் அண்ணாச்சி அளவுக்குக் காமெடியானார் அய்யா. திடுதிப்பென்று வேல்முருகனைக் கட்சியில் இருந்து நீக்க, அவர் கடலூர் ஆபீஸைப் பூட்டி சாவியைச் சுற்றிக்கொண்டே அருவாமணைப் பேட்டிகள் தட்ட... அத்தனையும் கரகர காமெடி. ''ஒருத்தனும் ஒயின்ஷாப் போகாத...'' என மருத்துவர் அலறிக்கொண்டு இருக்கும்போதே, மாம்பழத் தம்பிகளின் கூட்டம் டாஸ்மாக்கில் கட்டி ஏறியது!
பீதி தர்மர்!
ஸ்பெக்ட்ரம் டைனோசர் ப.சிதம்பரத்தை அடித்துத் தூக்க வர, திகிலு பிகிலு ஊதியது சாருக்கு. ''மம்பட்டியான்... உன்னைப் பிடிக்காம விட மாட்டேன்...'' என சுப்பிரமணியன் சுவாமி வேறு பிராது மேல் பிராதாகக் கொடுக்க, ஏகப்பட்ட சொம்புகளை நசுக்கினார் ப.சி. ''எனக்கு வயசாயிட்டு இருக்கிறதால மறதி அதிகமாகிருச்சு. எதுவும் நினைவுல இல்லை'' என சடன் சஞ்சய் ராமசாமி ஆனது 'அவ்வ்வ்வ்’ காமெடி. ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும்'' என்று ஆ.ராசாவும் அதிரடி வாக்குமூலம் கொடுக்க, முல்லைப் பெரியாறு கருத்துக்கு கேரளாவிடம் மன்னிப்புக் கோர... என வருடம் முழுக்க காரைக்குடியார் கட்டத்தில் கரகம் ஆடியது கெரகம்!
ஜால்ரா வாய்ஸ்!
தேர்தல் நேரத்தில் நாடார் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ ஆரம்பித்து சரத்குமாரைத் தலைவர் ஆக்கினார்கள். அடுத்த நாளே தனியே போயஸ் கார்டன் போய் ரெண்டு சீட்டுக்கு இவர் கூட்டணிக் கொழுக்கட்டை பிடிக்க, கொந்தளித்தது நாடார் சங்கக் கூடாரங்கள். இரண்டு இடங்களிலும் ஜெயித்த பிறகு இவர் ஆரம்பித்த ஜெயா கோஷத்தில், அ.தி.மு.க. அமைச்சர்களே மிரண்டுபோனார்கள். 'அண்ணா நூலகத்தை மாத்தினாத்தான் என்ன?’ 'பஸ் கட்டணத்தை ஏத்தினாத்தான் என்ன?’ என எதற்கெடுத்தாலும் இவர் அடித்த ஜால்ரா... அபத்தமான அம்மா ஆர்கெஸ்ட்ரா. ராதிகாவோடு லண்டனுக்குப் போய் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு!
அடிவேலு!
வருடம் முழுக்க யாரோ செய்வினை வைத்த மாதிரியே இருந்தது கைப்புள்ளையின் நடவடிக்கைகள். அண்ட்ராயரைக் கழட்டிக்கொண்டே ஆப்பைத் தேடிய கதையாக, விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானதால், தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் குதித்தார் வடிவேலு. போன இடத்தில் எல்லாம் கூட்டம் குமுறி, டி.வி-க்கு டி.வி. வெடிவெடிக்க... ''நாங்களும் அரசியல்வாதிதான்...'' என எகிறி எகிறி வண்டியேறினார். இவருக்குப் போட்டியாக சிங்கமுத்து சிலுப்ப, அது கொளேர் காமெடி டிராக். தேர்தல் முடிவுகள்தான் வடிவேலுவுக்கு அரசியலைக் கற்றுத்தந்தது. போண்டா மணி வரைக்கும் பீதியைக் கிளப்ப, அழகிரிக்கே நாட் ரீச்சபிள் ஆனார் பார்ட்டி. அடுத்த கொக்கியாக நில அபகரிப்புப் புகாரும் வர, கிட்டத்தட்ட அல்கொய்தா புதுத் தலைவர் மாதிரி ஆகியது வடிவேலு நடமாட்டம்!
மக்களேஏஏஏஏஏஏஏ...
ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து 41 சீட்டுக்களை வாங்கியதுகேப்டனின் இந்த வருட ஹிட்டு. ஆனால், அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் அடித்தது அம்புட்டும் காமெடி பிட்டு. தர்மபுரியில் பாஸ்கரன் என்ற வேட்பாளருக்குத் தர்ம அடி விழ, அது டி.வி-க்களில் நகைச்சுவை நேரம் ஆனது. கோவையில் நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் ஆப்சென்ட் ஆனார். ''அவரு கறுப்பு எம்.ஜி.ஆர். இல்ல... முறுக்கு எம்.ஜி.ஆர்.'' என ஆளாளுக்கு டிங்கரிங் பண்ண... அசராமல் 29 மாங்கா அடித்ததுதான் ஆறுதல். 'பின்னப் போறாருப்பா...’ என ஊர் உலகமே எதிர்பார்க்க, சட்டமன்றத்தில் ஆளையே காணோம். காரணம் கேட்டால், 'ஆறு மாசம் ஆகணும்’ என ஈர வெங்காயம் உரித்தார். ஜெயலலிதாவோடு ஈகோ காமெடி நடக்க, உள்ளாட்சித் தேர்தலில் ஜெ. இவரை காஜா பையன் ரேஞ்சுக்கு நடத்தி, தனியே தவிக்கவிட்டார். அதில் சேதாரம் கொஞ்சம் அதிகம்தான்!
கும்புடுறேஞ் சாமி!
தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு தங்கபாலு சீட் வாங்கிக் கொடுத்ததை எதிர்த்து, சத்தியமூர்த்தி பவனில் தினம் தினம் பஞ்சாமிர்தத் திருவிழா நடந்தது. போட்டி வேட்பாளர்களை இவர் நீக்க, பொங்கல் கையாலேயே அடித்தார்கள் எதிர் கோஷ்டியினர். மயிலாப்பூரில் தன் மனைவிக்கு தங்கபாலு சீட் வாங்க, கிடுகிடுத்தது ஏரியா. தொகுதி முழுக்க டாங்லீக்கள் இறங்கி நாய்களுக்கு ஊசி போட, உடனடியாக இவரே மயிலாப்பூரில் போட்டியிடுவதாக அறிவித்தார். கராத்தே தியாகராஜன் தலைமையில் மொத்தப் பேரும் புளி தடவியதில், தேர்தலில் வெங்கல சொம்பு நசுங்கியது. ஈ.வி.கே.எஸ், யுவராஜா குரூப் ''வாடா... வாடா...'' என இழுக்க, செம ரிலாக்ஸாக குறும்புக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் தங்கம். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்பதாகத் தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்ய, அதைப் பற்றி டெல்லி எதுவும் சொல்லாமல் இருக்க... அது உலக காமெடி!
டொப்பி டொப்பி!
கார்த்தியை சீரியஸாகவே பார்க்க முடியாது போலிருக்கிறது!
இந்த வருடம் அவரது நகைச்சுவை வெறி ரொம்பவே அதிகம். அ.தி.மு.க-வை ஆதரித்து ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு ஒரு வாரம் தூங்கிவிட்டார் பிரதர். எழுந்து பார்த்தால், எவனையும் காணோம். ''சுய மரியாதையைக் காக்க அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுகிறோம்'' என்று அறிவித்துவிட்டு, மறுபடி கொர்ர்ர்ர்ர். கட்சிக்காரர்கள் ஒரு மூட்டை பெருச்சாளியை உள்ளே விட, தாவி எழுந்து, ''ஏய் மிஸ்டர்... 40 இடத்துல எங்களால் நிக்க முடியும். பட் ஒன் திங்... டைம் இல்லாததால 14 இடத்துல நிக்கிறோம்'' என்றார். அவர் அறிவித்த 30 வேட்பாளர் களில் 3 பேர் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட, 3 பேர் விலை போய்விட, 3 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட, 2 பேரை அ.தி.மு.க-வினர் கடத்திவிட... ''ஏய்ய்ய்... தல ஷ§த்துது. ஷ§கர் கம்மியா ஒரு டீ...'' எனக் கதறினார் கார்த்திக்ஜி!
சண்டை பவன்!
தேர்தலை ஒட்டி எப்போது டி.வி-யைத் திறந்தாலும் உடைக்கப்பட்ட சத்தியமூர்த்தி பவனுக் குள் நாலைந்து ஜிம்பாய்கள் ஓடிக்கொண்டே இருந் தார்கள். திரு.வி.க. நகர் வேட்பாளராக நடேசன் என்பவரைத் தங்கபாலு அறிவிக்க, பீர் பாட்டில்களோடு வந்து ஆபீஸில் நலங்கு வைத்தது ஒரு கோஷ்டி. ஈழப் பிரச்னை தொடங்கி, எந்தப் பிரச்னைக்கும் போராடாத காங்கிரஸ் வேட்டிகள், லோக்கல் பாலிடிக்ஸில் எப்போதும் ரத்தம் பார்த்தார்கள். 'யார் என்ன கோஷ்டி’ என்றே தெரியாமல், ஆளாளுக்கு வந்து அடிக்க, 'பில்டிங் கைப்புள்ள’ ஆனது சத்தியமூர்த்தி பவன். 'பவனுக்குள் நுழையக் கூடாது’ எனக் கட்சியில் கட்டம் கட்டியவர்களுக்குத் தங்கபாலு தடை போட, 'நான்தான் ங்கொப்பன்டா, நல்லமுத்துப் பேரன்டா... வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாறேன்டா’ என்று எக்கச்சக்கக் கபடி ஆடியது அதிருப்தி டீம். ஞானதேசிகன் தலைவரான பிறகு, இப்போதைக்கு ஒரு குட்டி பிரேக்!
டர்ட்டி பார்ட்டி!
கோடம்பாக்கத்தின் டர்ட்டி பிக்சரை வழங்கியவர்கள்... சோனா - எஸ்.பி.பி.சரண்!
வெங்கட்பிரபு கோஷ்டியைச் சேர்ந்த வைபவ் வீட்டில் நடந்த பார்ட்டியில், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக எஸ்.பி.பி.சரண் மேல் போலீஸில் புகார் கிளப்பினார் சோனா. உடனடியாகப் பத்திக்கிச்சு விஷயம். ''வீடியோ ஆதாரம் இருக்கு...'' என சோனா சுழட்ட, ''பிசினஸ்தான் பேசினேன்'' என சரண் மறுக்க... தமிழர்களுக்கு அது ஜாலி ஜர்தா. வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் என சோனா கிளம்ப, சரண் சரண்டர் ஆனார். ''இந்த சூப் பாய்ஸுக்கு சூடு போடுங்கப்பா!'' எனக் கடுப்பில் இருக்கிறது கோலிவுட்!
கும்தலினி!
நீல வண்ணன் நித்யானந்தா இந்த வருடமும் அடங்க வில்லை!
சி.டி. சர்ச்சையில் கிழிந்து தொங்கியவர், ஆட்சி மாறியதும் மறுபடி கிளம்பினார். ரஞ்சிதா சகிதமாக பத்திரிகையாளர்களைக் கூட்டி கிறுகிறு விளக்கங்கள் சொன்னார். பெண் பக்தர்களோடு திருவண்ணாமலை கோயிலுக்கு பிக்னிக் வந்தார். திடுதிப்பென்று குண்டலினி யோகா என இவர் அடித்த கூத்துக்கள் படா காமெடி. ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நித்தியைச் சுத்தி உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கிப் பறக்க, தமிழ்நாடே சிரித்தது. ''அவனைப் புட்றா... புட்றா...'' என பெரியார் தி.க-வினர் துரத்த, ஜாலியாகவே திரிந்தார் இந்த காவி கட்டிய யோகி-பி!
மாண்புமிகு கல்வி அமைச்சர் (பத்தாப்பு ஃபெயில்)!
இது உச்சகட்ட டிராஜிடி! பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆன கல்யாணசுந்தரத்தை பாண்டிச்சேரிக்குக் கல்வி அமைச்சர் ஆக்கினார் முதல்வர் ரங்கசாமி. ''நான் ஒம்போதாவது பாஸுண்ணே... நீங்க பத்தாவது ஃபெயிலுண்ணே'' என்று முளைத்துக் கிளம்பிய கிண்டலை அழித்தொழிக்க, பத்தாவது பரீட்சை எழுதக் கிளம்பினார் சண்முகசுந்தரம். ஆனால், அதற்கு அவர் தனது டூப்பை அனுப்பினார் எனச் செய்திகள் எகிற, ஒபாமா வரைக்கும் சிரித்தார்கள். போலீஸார் புகார் பதிந்து ஆளைத் தேடினால்... நடுக் கடலில் தலைமறைவாகி நண்டு வறுத்துத் தின்றுகொண்டு இருந் தார் அமைச்சர். ரங்கசாமியும் இதைப் பற்றிக் கவலையே படாமல் இருக்க... கொந்தளித்தது புதுவை. 'கல்யாண சுந்தரத்தைக் கண்டுபிடித்துக் கொடுப் பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட, அமைச்சர் பதவி பணால் ஆன பிறகு, கோர்ட்டில் சரண்டர் ஆனார் முன்னாள் மாண்புமிகு!
மிஸ்டர் அணில்!
ஒரு குருவி அணிலானது சீரியஸ் காமெடி! அப்பப்போ தையல் மெஷின் தந்து வந்த விஜய்யைப் பொது வாழ்க்கைக்குக் கதறக் கதற இழுத்து வந்தது 'காவலன்’. 'அ.தி.மு.க-வுக்கு ஆதரவு’ என்று அப்பா அறிவித்தாலும், விஜய் உஷாராக வெளியில் வந்து பேசவே இல்லை. 'இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்து’ நாகப்பட்டி னத்தில் ஆர்பாட்டத்தைப் போட்டார். கூட்டம் கும்மிஅடித்து மேடைக்கே ஆபத்து வர, ரூமுக்குப் போய் மூஞ்சி கழுவிவிட்டு வந்து கை காட்டினார். அ.தி.மு.க. அமோகமாக ஜெயிக்க, 'அணிலாக உதவினோம்’ என்று இவர் பஞ்ச் அடிக்க, இணையத்தில் அந்தக் காமெடி அதீத ஹிட்ஸ் அள்ளியது. நடுவில் டெல்லிக்குப் போய் அண்ணா தாத்தா உண்ணாவிரதத்தில் தலை காட்டிவிட்டு, ஹைதராபாத்தில் இறங்கி பிரியாணி பார்சல் வாங்கி வந்தது அரசியல் காமெடி. நல்லவேளையாக 'வேலாயுதம்’ ஹிட்டடித்ததால் அணில், அணில் சேமியா ஆகாமல் தப்பித்தது!
இனிமா சினிமா!
ஆட்சி மாறியதும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களுக்கு அம்மா காட்டினார் இனிமா சினிமா!
நில அபகரிப்புப் புகார்கள் குவிய, எல்லா மாஜிக்களும் பாத்ரூமில் பதுங்கினார்கள். விடாமல் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.பி.பி.சாமி, பொங்கலூர் பழனிச்சாமி, கே.என்.நேரு என பூராப் பேர் முகத்திலும் பூரான் விட்டது போலீஸ். நில அபகரிப்புப் புகார்களுக்காகவே தனித் துறையையும் கோர்ட்டையும் ஜெ. உருவாக்க, 'இன்னிக்கு யாரைத் தூக்குவாங்களோ..?’ என ஆளாளுக்குப் பயந்து குலசாமிக்குப் படையல் போட்டுக்கொண்டு இருந்தார்கள். கலைஞரிடம் கதறலாம் எனப் போனால், அவரே வட்டச் செயலாளர் வண்டு முருகனாகத்தான் இருந்தார். அமைச்சர்கள் மட்டும் அல்லாமல், ஜெ.அன்பழகன், ப.ரங்கநாதன், பூண்டி கலைவாணன், லாட்டரி மார்ட்டின், ஜே.கே.ரித்தீஷ் என்று பலரையும் தெளியவைத்துத் தெளியவைத்து அடித்ததில் தி.மு.க. கூடாரமே திக்குமுக்காடிப்போனது!
விட மாட்டா எங்காத்தா!
'விளையாடு மங்காத்தா... விட மாட்டா எங்காத்தா’ பாட்டு அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு டெடிகேட்! ஆறே மாதங்களில் நாலு முறை ஜெயலலிதா 'மாத்தி மாத்தி யோசி’த்ததால், அடிக்கடி பிஸிபிஸிபேளா ஆனது கவர்னர் மாளிகை. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப் பூட்டியது பரஞ்சோதி விவகாரம்! மரியம்பிச்சை மரணம் அடைந்ததால், திருச்சி மேற்கில் எம்.எல்.ஏ. ஆன பரஞ்சோதிக்கு அடித்தது அமைச்சர் ஜாக்பாட். ஆனாலும், 'என்னை ஏமாத்திட்டார்’ என்று இரண்டாம் மனைவி ராணி பொளேர் புகார் புராணம் வாசிக்க... 'உலக வரலாற்றில் முதல்முறையாக’ குறுகிய கால அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்தார் பஞ்சர் பரஞ்சோதி!
ஒஸ்தி மாமேய்ய்ய்!
'ஒருவருக்கு ஐந்து குவார்ட்டர், இரண்டு பீர்தான் அனுமதி’ என்று தேர்தல் ஆணையம் லட்சுமணக் கோடு போட்டது. ஆனாலும், மாநிலம் முழுக்கவே குடிமகன்களின் 'மானாட மயிலாட’வைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தேர்தலை ஒட்டி ஆறு நாட்கள் விடுமுறை என்பதால், ஒரே நாளில் 15 கோடி ரூபாய்க்குக் கல்லா கட்டியது டாஸ்மாக். மதுக் கடைகளுக்கு எதிராக ராமதாஸ் பேசப் பேச... விற்பனை அதிகரித்தது. இடையில் டாஸ்மாக் சேல்ஸ் குறைய, 'ஆஹா... பிரேம்ஜி கோஷ்டி திருந்திருச்சா?’ என தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் சோதனை போட்டார்கள். ஃபாரின் சரக்குகளுக்குத் தனிக் கடை என எலைட் அறிவிப்பு வர... 'மச்சி ஓப்பன் த பாட்டில்’ எனக் குதூகலித்தது தமிழகம்!
சுதந்திரக் கனி!
ரிலே ரேஸைக் காட்டிலும் நீண்டது கனி ஜாமீன் ரிலே!
''புதன் கெழம ஜாமீன் வந்துரும்... வெள்ளிக் கிழம போகச் சொல்லிருவாங்க'' என ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் கிளம்பி ஏமாற்ற, ஏழெட்டு தட்டுகளை உடைத்தார் கலைஞர். டெல்லிக்கும் சென்னைக்குமாக ராஜாத்தி அம்மாள் பறந்து பறந்து ஓட்டியது ஆவேச சீரியல். அவ்வப்போது திஹார் போய் கலைஞர் குடும்பம் கனியைப் பார்க்க, ''ஸ்டாலின் அழுதாராம், அழகிரி ஹார்லிக்ஸ் குடுத்தாராம், தயாநிதி குடுத்த ஆப்பிள் பாக்ஸை வாங்கலையாம்'' என மீடியாக்களுக்குக் கிடைத்தது ஏகப்பட்ட கண்ணீர் காமெடிக் கதைகள். ஒருவழியாக கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க, ''அப்பா...டா... இப்பவாவது வந்தியே'' என பாச பஞ்ச் அடித்தார் கலைஞர். சுதந்திரப் போரில் கலந்துகொண்டு திரும்பும் ரேஞ்சுக்கு ஏர்போர்ட்டிலேயே கனிமொழிக்கு தி.மு.க-வினர் கொடுத்த தாரை தப்பட்டை வரவேற்பு அல்டிமேட் கூத்து. 'கனிமொழிக்குக் கட்சியில் முக்கியப் பதவி தர வேண்டும்’ என அடுத்த பூதம் கிளம்ப, 'இந்தக் குடும்பத்துக்குக் கேளிக்கை வரி போட்டாலே, தமிழ்நாட்டுக் கடனை அடைச்சுரலாமே!’ என அடுத்த பொழுதுபோக்குக்குத் தயாராகிறான் தமிழன்!
பொட்டு... அப்பீட்டு!
பொட்டு சுரேஷ்தான் இந்த வருஷ ரிப்பீட்டேய் காமெடியன்!
அழகிரியின் 'ஷேவாக்’காக வலம் வந்த இந்த மதுரை தில்லாலங்கடியைப் பற்றித் திகிலடித்தன செய்திகள். விஜய் பட வில்லன் மாதிரி இருக்கிற பார்ட்டியின் வரலாறு தகராறுகளைப் பாத்தி கட்டி எழுதினார்கள். ''என்கவுன்ட்டர்ல போட்ரலாமா?'' என்கிற வரை போலீஸ் ஏரியாவில் டெரர் ஏற, ''சோட்டானிக்கரை பகவதி அம்மா...'' என ஊர் ஊராகத் தாயத் துக் கட்டினார். ஆனாலும், விடாமல் நில அபகரிப்பு வழக்கில் ஆளைத் தூக்கியது போலீஸ். கொஞ்ச நாட்களில் அது குண்டாஸ் ஆக, 'அப்ரூவர் ஆகிரலாமா?’ என ஜெயில் பாத்ரூமில் யோசித்தார் பொட்டு. உள்ளேயே குடல் கறி பார்சல் அனுப்பி, அவரைச் சாந்தப்படுத்தினார் 'அ’னா. இப்போது குண்டாஸை உடைத்து வெளியே வந்துவிட்ட பொட்டு, ஏகத்துக்கும் பம்மிவிட்டார்!
குஸ்காக்கா!
குஷ்புதான் இப்போ தி.மு.க-வின் போர் வாள் என்பது காமெடியா... சோகமா?
தி.மு.க-வில் சேர்ந்ததும் பரபரப்பாகிவிடலாம் என நினைத்த குஷ்புவைத் தேர்தலில் வடிவேலு ஓவர்டேக் அடித்தார். தேர்தலுக்குப் பிறகு அத்தனை பேரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட, குபீர் கொ.ப.செ. ஆனார் குஷ்பு. ''தி.மு.க-வினரைப் பொய் வழக்கில் கைது செய்கிறார்கள்'' என்று ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் காலில் காயத்துடன் குஷ்பு கலந்துகொள்ள... உடன்பிறப்புக்கள் கதறி அழுதார்கள். கனிமொழிக்காக டெல்லியில் தேவுடு காப்பது, தேனாம்பேட்டை கூட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து பஞ்ச் அடிப்பது, முல்லைப் பெரியாறுக்காக நடந்த உண்ணாவிரதத்தில் கலைஞர் கையால் பழரசம் குடிப்பது என தி.மு.க-வின் சூடான குஸ்கா ஆனார் குஷ்பு. ''கட்சியைக் கைப்பத்திருமோ'' என ஸ்டாலினே ஜெர்க் ஆகிற அளவுக்கு இருந்தன குஷ்பு ரவுசு!
உலகம் முழுக்க அணு மின் நிலையங்களுக்கு எதிராக எழும் முழக்கங்களில் சுப.உதயகுமாரனின் குரல் மிக முக்கியமானது. இன்றைய கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்ட நெருப்புக்கு 80-களிலேயே கனல் எடுத்தவர் இவர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவக் கிராமத்து மக்கள் இவரது தலைமை யில் உறுதியாகத் திரண்டபோது இந்திய அரசே நடுங்கியது. அமைதிக் கல்வியில் முனைவரான இவர், எத்தியோப்பியாவில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணி யாற்றியவர். தெருமுனைப் பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிவியல் மேடைகள், பட்டினிப் போராட்டங்கள் என ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்றவைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் மீதான தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றங்களில் 'கறும்’புலியாக உலவினார். விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதித்ததும்தான் கேரள அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஓர் இடம்கூட இல்லை. ஆனாலும், அந்தக் கவலை இல்லாமல், தமிழக நலனுக்காக முழக்க மிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது. பதவிகளுக்கும் பேரங்களுக்கும் சமரசங்களுக்கும் இரையாகிக்கிடக்கும் தமிழக அரசியலில், வைகோ... ஒரு போராட்டப் புயல்!
துணிச்சலும் தூய்மையுமாக வந்து, தமிழக மக்களின் கனவு அதிகாரிக்கு உருவம் கொடுத்தார் பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ். ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றும் தேர்தல் அவலங்களுக்கு இவர் அடித்த சாவு மணியில், பல அரசியல்வாதிகளின் அஸ்திவாரமே கிடுகிடுத்தது. 'ஓட்டுக்குப் பணம்’ என்ற வியாபார அரசியலுக்கு இவர் தடாலடித் தடைகள் போட, ''வெச்சார்ல ஆப்பு... வெச்சார்ல ஆப்பு!'' என ஷங்கர் பட க்ளைமாக்ஸ் போலக் குதூகலித்தது தமிழகம். ''தமிழகத்தில் எமர்ஜென்சி அமலில் இருக்கிறதோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது!'' என்று அப்போதைய முதல்வரையே புலம்பவைத்தது இவரது அதிரடி வியூகங்கள். ''நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும். உங்கள் ஓட்டு, உங்கள் சக்தி. அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்!'' என்ற இவரது அறைகூவலுக்கு தமிழகமே வாக்குச் சாவடிகளுக்குத் திரண்டதன் விளைவு, வரலாறு காணாத 77.4 சதவிகித வாக்குப் பதிவு சாத்தியமானது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு செல்போன் எண் அறிவித்தது, வெளி மாநிலங்களில் இருந்து நான்கு ஐ.ஜி-க்களைத் தேர்தல் பணிக்கென இறக்கியது, சென்சிட்டிவ் மதுரையை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, விதிமீறல்கள் - வன்முறைகளை அடக்கியது எனத் தீயாக வேலை செய்த பிரவீன்குமார், ஒரு மக்கள் அதிகாரிக்கான கம்பீர உதாரணம்!
தமிழ்த் திரைச் சரித்திரத்தில், கே.பி-யின் சாதனைகள் ஓர் இனிய அத்தியாயம். மனித உறவுகளின் மகத்தான பக்கங்களை திடுக்கிடும்படியாகத் திறந்துகாட்டியவர். கோடம்பாக்கத்தின் குருஜிக்கு, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் கனிந்தது.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது, சண்முகத்தின் உயிர்க் குரல். 1992-ம் ஆண்டு வாச்சாத்தி மலைக் கிராமத்தில், காவல் துறையும் வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் சண்முகம் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்திய மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, குற்றம்சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது நீதிமன்றம். இந்திய நீதித் துறை சரித்திரத்தில் இது ஒரு மைல் கல். அந்த எளிய மக்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்கப் போராடிய சண்முகம், தீண்டா மைக்கும் அதிகார வன்முறைக்கும் எதிராகத் தீப்பந்தம் ஏந்துவதையே தன் வாழ்க்கையாக்கிக் கொண்டவர்!

கருணாநிதி ஆட்சியில் அமலாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, சமச்சீர்க் கல்விக்கு ஜெயலலிதா தடை போட்டபோது, கல்வியாளர்களுடன் பிரின்ஸ் கஜேந்திர பாபு சுழற்றிய போராட்டச் சாட்டை அரசை மிரளவைத்தது. 'பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கான விழிப்பு உணர்வு போராட்டங்களை முன் னெடுத்துவருபவர். பொதுக் கூட்ட மேடைகள், அரங்கக் கூட்டங்கள், ஊடகங்கள் மூலமாக சமச்சீர்க் கல்விக்காகத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிரசாரம் ஒரு தலைமுறைக்கு இவர் தந்த கொடை!
28 வருடங்களுக்குப் பிறகு, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு தமிழன் இடம் பிடித்தது நமக்கான பெருமை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரிலேயே 'தொடர் நாயகன்’ பட்டம் தட்டிய ரவிச்சந் திரன் அஸ்வினைத் தேசம் திரும்பிப் பார்த்தது. உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஆகக்கூடிய எதிர்காலத்தை, அஸ்வினின் அடுத்தடுத்த சாதனைகள் பறைசாற்றின. முதல் டெஸ்ட்டிலேயே 'மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வாங்கிய மூன்றாவது இந்தியர். ஒரே டெஸ்ட்டில் ஐந்து விக்கெட்டுகளும் சதமும் கண்ட மூன்றாவது இந்தியர். ஐ.பி.எல். பந்து வீச்சாளர்களிலேயே சிக்கனமான ஆவரேஜ் வைத்திருக்கும் பௌலர் என ரெகார்ட் பிரேக்குகளால் நிரம்பி இருக்கிறது இந்த சென்னைப் பையனின் டைரி!
பாசம் வழியும் கண்களும் பட்டாசுப் பேச்சும் யதார்த்த நடிப்புமாக சரண்யாவை எல்லோருக்கும் பிடிக்கும். படத்துக்குப் படம் மிளிரும் நடிப்பில், தமிழின் முக்கியமான நடிகைகள் பட்டியலில் பச்சக்என்று இடம் பிடித்த சரண்யாவுக்கு, 'தென்மேற்குப் பருவக்காற்று’ வீசியது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது. 'நாயகன்’ மூலம் சினிமாவுக்கு வந்த சரண்யா, கதாநாயகியாக டான்ஸ் கட்டிவிட்டு, அம்மா, அக்காவாக ஒப்புக்கு அழுதுவிட்டுப் போகும் நடிகைகளுக்கான சாபத்தை உடைத்தது பெரும் சாதனை. 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக ஓர் ஏழைத் தாயாக உழைப்பைக் கொட்டி வாழ்ந்து காட்டியிருந்த சரண்யாவுக்கு இன்னும் நிறைய தீனி போட வேண்டும் தமிழ் சினிமா!