
அம்மணமாய்...
ஊனமுற்றோர் தினம் என்றால் தேர்தல் நாளே
உகந்ததாய் இருக்கும் என்று உலகம் போற்றும்
ஞானமுற்றோர் பலர் வாழ்ந்த இந்த நாட்டில்
நல்லவர்கள் வாழ்பவர்கள் சொல்லுகின்றார்
மானமற்று மனைவி மக்கள் பேரன் பேத்தி
மன்னரைப் போல் தோரணைகள் கொண்டு வாழும்
ஊனமுற்ற தலைவர்களின் கூட்டம் வந்து
ஓட்டுகள் சேகரிக்கும் அந்த நாளே
நாமறிய நாடறிய உலகறிய
நலமொன்றும் அறியாத மக்கள் வாழ்வை
தாம் வாழ தன் குடும்பம் மட்டும் வாழ
தரித்திரத்தில் தள்ளிவிட்டு வரிப் பணத்தில்
தாம் தூம் என்றிலவசங்கள் தன்னைத் தந்து
தன் வீட்டுப் பணத்தில் அதைத் தந்தாற் போல
ஆம் ஆம் இங்கு நடிப்பவர்கள் அவர்களே தான்
அய்யா மன ஊனமுற்றோர் புரிந்தீரோ நீர்
நாணமில்லை வெட்கமில்லை மக்கள் முன்னர்
நடமாடித் திரிகின்றார் மீண்டும் வந்து
ஆணவத்தோ டாள்வோமென் றுரைக் கின்றார் காண்
அவர்களுக்கு காங்கிரசார் துணையானார் காண்
மானமற்ற காங்கிரசார் காந்தி நேரு
மக்களது தலைவர் காமராசரோடு
வான் புகழும் கக்கனையும் மறந்த தோடு
வாக்குகள் கேட்கின்றார் அம்மணமாய்
- நெல்லைக்கண்ணன்.
No comments:
Post a Comment