Wednesday, June 2, 2010

புத்தகத்தின் வரிகள்....

அரசு மகளிர் கல்லூரியின் சருகுகள் நிறைந்த மரத்தடியில் எதிரெதிரே அமர்ந்தபடி உணவு அருந்திக்கொண்டிருந்த தூரத்துச் சுடிதார் பெண்களின் காதில் விழாத சம்பாஷனை. ஓவர்டேக் செய்து கடந்த பேருந்தின் நடத்துநருக்கும் எங்கள் ஓட்டுநருக்கும் இடையில் வணக்கம் செய்தும் நொடிப் பொழுதுகளில் சில சொற்கள் பரிமாறியுமாய் நிகழ்ந்த நடுச்சாலை நட்பு. வயல்வெளியின் நடுவில் இருந்த பம்புசெட் அறைச் சுவரின் நெளிவுகளுக்கு ஏற்ப ராம்கோ சிமென்ட் விளம்பரத்தை வரைந்திருந்த பெயின்ட்டரின் ஓவிய நேர்த்தி. எங்கோ தயாராகி யாரோ பயன்படுத்தி வீசி எறிய காற்றில் அடித்துவரப்பட்டு புழுதி படிந்த சாலையோர கருவேல முட்புதரில் வெண்ணிறப் பழம்போலத் தொங்கிக்கொண்டு இருக்க நேர்ந்துவிட்ட கேரி பேகின் வாழ்வுப் பயணம். இவை ஏதொன்றும்போல கவனத்தை ஈர்க்கும்படியாக இல்லை இந்தப் பேருந்து நெடும்பயணத்தில் படிக்கவென்று எடுத்து வந்து மடியில் விரித்துவைத்த புத்தகத்தின் வரிகள்!